இன்றைக்கு நூறாண்டுகளுக்கு முன்னர் புவியில் தோன்றிய குமாரரத்தின வேணாவுடையார் அவர்கள் எங்கள் பாட்டனார் ஆவார்கள். இவர்களுக்குச் சகல நற்குணங்களும் ஒருங்கே நிறைந்த பீலிக்காம்பட்டி ஓதாளர் குல வேளிர் குடியில் தோன்றிய வெங்கிட்டம்மை என்ற குணவதியார் இல்லறத் துணைவியாகவும் பட்டத்துத் தேவியாகவும் வந்து சேர்ந்தார்கள். அவர்கள் புண்ணிய வயிற்றில் இரண்டு ஆண் மக்கள் தோன்றினார்கள். அவர்கள் மூத்த குமாரரே S.V. பெரியண்ண வேணாவுடையார் அவர்கள் ஆவார்கள். இவர்கள் இளவலார் குப்புசாமிக்கவுண்டர் அவர்கள். இவர்களே என் தந்தையார் குமார ரத்தின வேணாவுடையார். துணைவியும் பட்டத்துத் தேவியும் ஆன வெங்கிட்டம்மையார் உலகைவிட்டு வேற்றுலகம் புகுந்த காரணத்தால் எங்கள் பாட்டனார் குமாரரத்ன வேணாவுடையார் பொன்னுபுரத்தில் வாழும் பொன்னர் குலத்தில் தோன்றிய தெய்வயானை அம்மையாரைத் தனது இளைய துணைவியாக மணந்தார்கள். அவர்கள் வழியில் சந்ததியாக ஒரு சகோதரரும் ஒரு சகோதரியும் தோன்றினர். சகோதரர் பெயர் S.V. பெரியசாமிக் கவுண்டர் சகோதரி நல்லம்மையார். புதல்வர்களால் பொலிந்த எங்கள் பாட்டனார் நல்வாழ்வு வாழும் காலத்தில் மறவர்பாளையத்தில் உள்ள எங்களது குல தெய்வமாகிய அப்பரமேயர் ஆலயத்தை நல்ல முறையில் பரிபாலித்து வந்தார், அவ்வாலயத்திற்குச் சுற்று மதிலும் முகப்பில் உள்ள பிரதான கோபுரமும் செய்வித்தார். அவ்வாலயப் பூசனை நல்ல முறையில் நடந்து வரத் தமக்குச் சொந்தமான வயலை அறுபது சலகை நெல் குத்தகை வரும் படி மானியம் எழுதிவைத்தார்கள். தாராபுரத்தில் ஒரு சத்திரத்தை நிருமித்து அதற்கு வருடம் 30 சலகை (நெல்) குத்தகை வரும் நெல் வயலைமானியமாக எழுதி வைத்துள்ளார்கள். தமது அரண்மனைக்கு வரும் விருத்தினரை நல் உணவூட்டி மகிழ்வித்தும் தன்பால் நீதி வேண்டி வருகிறவர்களுக்கு நல்லபடி நீதி வழங்கியும் வந்தார் இவர்.
தென்கரையில் வாழ்ந்து வந்த வேணாடர்களில் ஒரு சிலர் பெரியண்ண வேணாடர் என்றும் அவரது குமாரர், குமார ரத்தின வேணாடர் என்றும் தங்கள் பட்டப் பெயரைச் சூட்டிக் கொண்டனர். அவர்களில் சில காலத்திற்குப் பிறகு குமார ரத்தின வேணாடர் என்ற ஒருவர் நாட்டுத் தலைமையுடன் சிறப்பெய்தி வாழ்ந்தார். அவரது காலத்தில் அப்பரமேயர் என்ற சிவாலயப் பெருமையை அறிந்து ஆயக்குடி என்ற ஊரில் வாழ்ந்த ஒரு புலவர் அப்பரமேயர் சதகம் என்ற நூலைப் பாடி மேற்கூறிய குமார ரத்தின வேணாவுடையார் அவையில் அரங்கேற்றினார். அப்புலவருடைய பாடலையும் தங்கள் ஆணைத் தெய்வமாகிய அப்பரமேயர் என்ற தெய்வத்தின் பெருமையையும் வியந்து அச்சதகத்தைப் பாடி வந்த புலவர்க்கு 300 ரூபாய் கொண்ட பண முடிப்பும் பெட்டி வண்டியுடன் இரண்டு காளைகளையும் தந்து மகிழ்வித்தனர். அவர் காலத்தில் அவரது ஆதீனப் புலவர்களில் ஒருவரான பெரியண்ணப் புலவர் என்பவர் வேணாவுடையான் காதல், வேணாவுடையான் பள்ளு என்ற நூல்களைப் பாடி மகிழ்வித்தனர்.
எங்கள் வேணாவுடையார் பரம்பரையில் மற்றும் பலர் நாடாளும் உரிமையுடன் மேம்பாடு உடையவராகத் தீர்த்தா வேணாவுடையார் என்றும் அவினாசி வேணா உடையார் என்றும், செல்ல வேணாடுடையார் என்றும் பலர் வாழ்ந்தனர். முத்து வேணாவுடையார் என்றும் இரத்தின வேணாவுடையார், முத்து இரத்தின வேணாடுடையார் என்ற பெயர்கள் கொண்டும் சிலர் வாழ்ந்து வந்தனர். பெரியண்ண வேணாவுடையார் குமார ரத்தின வேணாவுடையார் என்ற பெயர்கள் உடையவர்களாய பல பெரியார்கள் வாழ்ந்தும் வந்தனர். எங்கள் வேணாட மன்னர்களில் கடவுளரைப் பாடித் துதிக்கும் புலமை பெற்றவராகச் சிலர் வாழ்ந்து வந்தனர். பகையரசர்களை வெல்ல ஒரு வேணாட மன்னர் எங்கள் குல தெய்வமான கருப்பண்ணசாமி மீது சத்துரு சங்கார மாலை என்றதோர் மாரக நூலைப்பாடி வென்ற அனுபூதிமானாக ஒருவரும் இங்கு வாழ்ந்துள்ளார். அவர் பாடிய அம்மாலையில் உள்ள இரண்டு பாடல்களை மட்டும் இங்கு தருகிறேன்.
1. பெலா வொடு புன்னை வனஞ்சூழும் கொற்றைப் பெருநகரில்
சலாமிடப்-பெற்ற ரணகொலு வாஎன்றன் சத்துருவின்
விலாவழி தன்னில் புகுந்தூன் உடலை மிகக்கிழித்துச்
சலாமிடச் செய்வாய் கருப்பண்ண ராயனும் தாட்டிகனே.
2. காணா விடத்திலும் கண்டிடும் போதுங் கருதிநம்மைப்
பேணா துரைக்கின்ற வஞ்சக நெஞ்சரின் பேருடலை
வாணாத் தடிகொண்டு அடித்தூன் உடலை வதைத்துயிரைக்
சேணாடு சென்றிடச் செய்வாய் கருப்பண தேசிகனே
இங்ஙனம் எங்கள் வேணாடர் வம்சா வழியில் அன்றுமுதல் இன்றுவரை சுமார் முப்பது தலைமுறையோர்கள் வாழ்ந்து வந்தனர். அவர்கள் முடிசூடும் நாளில் எங்கள் அவைப் புலவர்கள் பலர், பட்டாபிஷேகப் பண்பு கவிகள் பலவற்றைப் பாடியுள்ளார்கள். அவைகளையெல்லாம் விரிக்கில் பெருகும் என்று கருதி இத்துடன் நிறுத்தி எங்கள் பாட்டனார், பெரிய தந்தையார் இவர்களைப் பற்றி இங்குச் சிறிது வரைந்து என்னைப் பற்றியும் உங்கட்கு அறிமுகம் செய்து இக்கட்டுரையை இங்கு நிறைவு செய்ய எண்ணாகின்றேன்.
|